தேவதைக்காதல்
அத்தியாயம் ஒன்று
பன்னிரெண்டாம் அகவையில் பெற்றோரை இழந்து,
ஊனுக்கு ஊண்தேடி கானகம் புகுந்து,
பெற்றதில் பாதி இறை மிசை படைத்து,
மீதி இரை கொண்டு தேகம் வளர்த்த அவனுக்கு,
அத்தனிமையில் துணையாய் இருந்தவர் இறை மட்டுமே!!
உடலின் இரை தேடல் குறுகி,
மனதின் இறை தேடல் நெடுகியது, அவனுக்கு!!
பத்தின் பிந்தைய மூன்றாம் அகவையில்,
இறை நோக்கி, இரை துறந்து, இருக்கலான அவனது தவம்,
மூபத்தின் முந்தைய மூன்றாம் அகவையில் கலைந்தது,
இறைவனின் தோன்றலால்!!
"பதின்ம வயது தொடங்கி பதினான்காண்டுகள்
என்னை நோக்கி நீ இருந்த தவத்தின் வலிமை கண்டு மெச்சுகிறேன் மானுடனே!
உன் தவத்தின் பயனாக மூன்று வரம் தருகிறேன்,
வேண்டுவன கேள்" என்றார் இறை!!
துறவு துறக்க விரும்பிய அவன்,
இறைவனின் புருவம் உயர கேட்டான் முதல் வரத்தை!
"யாம் காதலிக்க வேண்டும் ஒரு தேவதை"
ஏற்றுக் கொண்டான் தேவன் அதை,
வந்து இறங்கினாள் ஒரு தேவதை!