தலைப்பற்ற காதல்


"அப்பறம், நீ யாரயாச்சு லவ் பன்னுறியா ஜீவா??"
நார்மலாகவே கேட்டாள் ஐசு..

ஐசு(எ)ஐஸ்வர்யா கடந்த எட்டு மாதங்களாகவே ஜீவாவுடன் பயின்றாலும், இருவரும் நண்பர்களாகி எட்டு நாட்களே ஆகி இருந்தது..

"பண்ணேண்.. ஆனா இப்போ இல்ல.."

"ஓ.. யாருடா அந்த அன்லக்கி கேர்ள்?"


மவுனம் மட்டுமே பதில்..
பல வற்புருத்தல்களுக்கு பிறகு, மெல்ல உதிர்த்தான் வார்த்தைகளை:

அவ பேரு ரோஜா.. டூ யூ க்னோ ஹர்?

ரோஜா... ம்ம்ம்ம்... தெரியாது டா..

தன் கடந்த கால காதலைக் கூறலானான் அவன்:

நாங்கள் இருவரும், பள்ளி இறுதி ஆண்டில் ஒரே வகுப்பில் பயின்றதால், பரஸ்பறம் நண்பர்கள் ஆனோம். ஒரு வருட நட்பு, பள்ளி நாட்கள் முடிந்த உடன் முடிந்து விடவில்லை. அப்பப்போ ஒரு ஹாய், ஒரு பாய் என வந்து கொண்டிருந்த குறுஞ்செய்திகள்.. அவையும் அதர்க்கடுத்த சில நாட்களில் மறைந்து போயின.. அவ்வளவு பலமானது கூட அல்ல, எங்கள் நட்பு..

இரண்டு வருடங்கள் காற்றில் கரைந்தோடி இருந்தன.
சட்டென்று ஒருநாள் மாலை, ரோஜாவின் பெயருடன் அலரியது என் மொபைல்..
"ஹாய் டா.. நான் ரோஜா பேசுறேன்......"

இரண்டாண்டு இடைவெளிக்கு பின், மீண்டும் துளிர் விட்டது எங்கள் நட்பு.

குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் உரமாக அமைய, வேகமாக வளர்ந்து வந்த அது, ஒரு மாதம் கழித்து ஒரு திருப்பத்தைக் கண்டது..
"ஐ லவ் யூ டா ஜீவா".

 நட்பின் வெளிப்பாடு என்றே அதனை எண்ணிய நான், ஒரு "மீ டூ"வை சொல்லி வைத்தேன்.. அதன் பின், பல ஐ லவ் யூக்களையும் மீ டூக்களையும் கண்டது எங்கள் நட்பு(?).. அவ்ளைத் தோழி என்றெண்ணியே நான் பேச, என்னைக் காதலனாக்கி பேசினாள் அவள்.. அவள் பேச்சில் நட்பைத் தாண்டிய ஊடல்கள் இருப்பதைக் கண்டு கொண்டேன்.. அது காதல் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.. ஏனோ தெரியவில்லை, காதல் என்றாலே கரப்பான்பூச்சியைக் கண்ட பெதும்பையைப் போலானேன் நான்.. பயம் மட்டுமே, அருவெருப்பல்ல..


அன்று மாலை சந்தித்த வேளையில் அக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் எண்ணிக்கொண்டிருக்க, அங்கு நேரிலும் கூறினாள், "ஐ லவ் யூ"..
"என் வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டர்கள் ரோஜா". அதற்கு பின்னான ஒரு மணி நேரம் என்னுடையதல்ல.. கண்ணத்தில் வழிந்து காய்ந்த சுவடுக்கு மேல், மேலும் வழிந்து கொண்டிருந்த கண்ணீருடன், முற்றுப்புள்ளி வைத்தாள்; அவளுடைய காதலுக்கும், என்னுடைய நட்பிற்கும்..

அதற்குப் பின்னான இரு நாட்கள், புயலுக்குப் பின்னான அமைதி; இல்லை, புயலுக்கு முன்னான அமைதி என்றே கூறலாம்.. இரு எழுத்துக்களுடன் ஒரு குறுஞ்செய்தி.. "HI"..அதற்கடுத்த பதிநான்கு நாட்கள், என்ன உறவென்பதையே அறியாமல் பேசினேன்..இப்பொழுது வந்தது புயல், "நாம் இருவரும் காதலிப்போம் ஜீவா.. திருமணம் எல்லாம் கூட செய்து கொள்ள வேண்டாம்"
(என் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற புனித என்னத்துடனே அவள் அதைக்கூறினாள் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்).

"பேசுவதை உணர்ந்தே பேசுகிறாயா ரோஜா??"

"ஆமாம் ஜீவா.. என்னை திருமணம் செய்வதில் தானே உனக்கு பிரச்சனை??.. நாம் காதலிக்க மட்டும் செய்வோம்.. இதற்காவது ஒத்துக்கொள் இல்லையேல், _________"

"இல்லையேல்??"

இணைப்பைத் துண்டித்தேன் நான்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு அழைப்பும் இல்லை..

மூன்றாம் நாள், என் நண்பன் அழைத்திருந்தான். "விஷயம்  தெரியுமாடா? நம்ம ரோஜா விஷம் குடிச்சிட்டாளாம்".

பதரி ஒடினோம் மருத்துவமனைக்கு..
"ஒரு பாடம் ஃபெயிலா போனதுக்கெல்லாமா வெஷம் குடிப்பாங்க தம்பி???" அழுது வறண்ட கண்களுடன் அவளின் தாய்..

ஈரம் கண்ட என் கண்களும் பனித்தன..

"ஒரு பாடம் ஃபெயிலானதுகெல்லாமா விஷம் குடிப்பாங்க?? நான் எதுக்கு விஷம் குடிச்சேன்னு உனக்கு தெரியாது??"
இது அவளின் கண்கள்.. என்னை நோக்கி.. அதற்கு மேலும் அக்கேள்விக்கனையை என்னுள் எய்துவிக்க முடியாமல், பார்வையைத் திருப்பினேன்..


காதலித்தேன்... வேறு வழியின்றி...
இரு மாதங்கள் கடந்திருந்தன..
இப்பொழுதும் காதலித்தேன், ஆனால், உண்மையாக...

________________________________________________________________________

வாழ்க்கையை நான் வாழ்ந்தேன் என்பதை விட, வாழ்க்கை என்னை வாழ வைத்துக்கொண்டிருந்தது என்று சொல்லலாம். என் வாழ்க்கை எனக்கே பிடிக்கவில்லை. என் வாழ்வில் அவள் கதவைத் தட்டி வந்திருந்தாலும், "வா" என்னும் எந்தன் அனுமதியின்றியே நுழைந்தவள் அவள்... நான் இவ்வரெல்லாம் நினைக்க, என் பெற்றோர் இந்த காதலை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்..
திடீரென்று ஒரு நாள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மக்களை சூரையாடிய சுனாமியைப்போல், நானும் சிதைத்தேன் (என்றே நினைத்தேன்), அவள் மனதை. மொபைலில் இருந்து பாட்டரியைக் கழட்டினேன்.. மூன்று நாட்கள் கழித்து அழைத்தேன் அவளை, என் நண்பனின் அலைபேசியில் இருந்து. "ரோஜா, நாம் காதலிப்பதை என் தந்தை எப்படியோ நுகர்ந்து விட்டார். என் மொபைல் அவரிடம். அழைக்கிறேன்".

டக்..

கட் செய்தேன்..


இது நடந்தேறி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன இன்றோடு..

"நீ அதுக்கு அப்பறம் அவள் கூட பேசவே இல்லியா ஜீவா??"

கதையின் கிளைமேக்ஸை அறியும் ஆவலில் கேட்டாள் ஐசு



"பேசினேன்.. நேற்று"

" 24 மாதங்களுக்கு முன்னால் வாங்கிய (புது) சிம்'மில் இப்பொழுது ஒரு புது நம்பரிலிருந்து கால்.

ஜீவா. நான் ரோஜா பேசுறேன்.
நம்ம கூட 12ஆவது படிச்சானே மனோ, அவனோட தம்பி நம்பர் இருக்கா உன் கிட்ட?

நீ எப்படி இருக்க? என்ற கேள்வியைக்கூட அப்பொழுது அவளிடம் கேட்க திராணியற்றவனாய் கூறினேன் "இல்லியே. ஏன்?"




"மூனு நாளா பேசவே இல்ல. இப்போ அவனோட ஃபிரெண்டு மொபைலிலிருந்து கால் பண்ணியிருந்தான். அவங்க அப்பா, அவனோட மொபைல வாங்கி வச்சிருக்காறாம். என்னாச்சினே தெரியல. அவனோட தம்பி நம்பர் கடச்சா எனக்கு கால் பண்ண சொல்லு"

டக்..

இது அவள் கட் செய்ததால் வந்த சப்தம்...